× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

இந்தியாவில் கடை விரிக்க லஞ்சம் கொடுத்த வால்மார்ட் - ரூ.1964 கோடி அபராதம்

22-06-2019

இந்தியாவில் வர்த்தக உரிமை பெறுவதற்காக வால்மார்ட் நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் பேச்சு நடத்துவதற்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு, லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டதை அடுத்து வால்மார்ட் நிறுவனத்திற்கு சுமார் ரூ.1964 கோடி அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்க சட்டவிதிகளின் படி அமெரிக்க நிறுவனங்கள் பிற வெளிநாடுகளில் தனது கிளைகளையும் வர்த்தகத்தையும் பெறுக்குவதற்காக இடைத்தரகர்களை அணுகுவதையோ, அவர்களுக்கோ அல்லது அவர்கள் மூலமாகவோ முறைகேடாக லஞ்சம் கொடுத்து தங்களின் காரியத்தை நிறைவேற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் படத்தில் ஒரு காட்சியில், லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவர் கேட்க, அதற்கு ஹீரோ, அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் வாங்குகிறார்கள். ஆனால் இங்க கடமையை செய்வதற்கே லஞ்சம் வாங்கிக் குவிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு லஞ்சம் வாங்கியவரின் கன்னத்தில் பொளேர் என ஒரு அறை விடுவார். அது உண்மைதான் என்ற நிரூபித்திருக்கிறது வால்மார்ட் நிறுவனம். அமெரிக்காவின் பிரமலமான வால்மார்ட் நிறுவனம் உலகெங்கும் தனது சூப்பர் மார்க்கெட் கிளைகளை பரப்பி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்தியாவிலும் தனது கிளைகளைப் பரப்பி இந்திய நிறுவனங்களுக்கு கடும் போட்டி போடுவதோடு, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஏராளமான கவர்ச்சிகரமான சலுகைகளையும் அள்ளிவீசி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வால்மார்ட் நிறுவனம், இந்தியா, மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தனது கிளைகளை நிறுவுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து விசாரணை நடத்திய அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு (US Securities and Exchange Commission-SEC) ரூ,1964 கோடி அபராதம் விதித்துள்ளது. வால்மார்ட் நிறுவனமும் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அபராதத் தொகையையும் செலுத்த முன்வந்துள்ளது. இதில் காமெடியான விசயம் என்னவென்றால், இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தனது கடைகளுக்கு கட்டட அனுமதியை எளிதில் பெறுவதற்காக பில்லி, சூனியம், மாந்திரீகம் செய்து வெகு விரைவில் கட்டட அனுமதி பெற்றுத் தருகிறோம் என்று உதார் விட்டு ஏமாற்றும் போலியான மந்திரவாதக் கும்பலுக்கு வால்மார்ட் நிறுவனம் ரூ.3.5 கோடி வரையிலும் செலவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வால்மார்ட் நிறுவனம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தாமல், அந்தந்த நாடுகளின் இடைத்தரகர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியும், அந்தந்த நாட்டு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமும் வழங்கியும் எளிதில் வர்த்தக உரிமையை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக செய்த செலவுகள் குறித்து வால்மார்ட் நிறுவனம் தனது கணக்குகளில், சில்லறை செலவுகள், எதிர்பாராத செலவுகள், மற்றவகை செலவுகள், தொழில்முறை கட்டணம், அரசு வகையில் செலவுகள், தற்செயலான செலவுகள் என்று ஏகத்துக்கும் வரையறை இல்லாமல் எழுதியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு வால்மார்ட் நிறுவனம் அந்நிய நாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Foreign Corrupt Practices Act-FCPT) விதிமுறைகளையும் அநாயசமாக மீறியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வால்மார்ட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே எஃப்சிபிஏ விதிமுறைகளை மதித்து பின்பற்றி நடக்காமல் தொழிலை அமோகமாக நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் சார்லஸ் ஜெய்ன் வால்மார்ட் நிறுவனத்திற்கு ரூ.1964 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ.1003 கோடியை அமெரிக்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகவும், ரூ.961 கோடியை அந்நியநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை செலுத்த வார்மார்ட் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வால்மார்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், எங்கள் நிறுவனம் பிரச்சனையை சுமூகமாக முடிக்கவே விரும்புகிறது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு விதித்துள்ள அபராதத் தொகையை உடனடியாக செலுத்தவும் முன்வந்துள்ளது. அதற்கு எங்கள் நிறுவனத்திடம் போதுமான நிதிவசதியும் உள்ளது. அதோடு வால்மார்ட் நிறுவனம் மிக நேர்மையான முறையிலேயே வர்த்தகம் செய்ய நினைக்கிறது. மேலும் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாகவே செயல்பட விரும்புகிறது என்றும் கூறினார். .....

இது தொடர்பான செய்திகள்