× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்..!

30-01-2020

நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பொருளாதார ஆய்வறிக்கையும் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்காக பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை அண்மையில் அழைத்து கருத்து கேட்டறிந்தார். தொழில்துறை, வேளாண்மை ஆகியவற்றில் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

இதனால், விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரைவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், வேளாண் தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடியும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத் தொடரில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அத்துடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாரதிய ஜனதா கடுமையாக விமர்சிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவை நடவடிக்கைகளை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது.

.....

இது தொடர்பான செய்திகள்