× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா தேர்வு

20-01-2020

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜகத் பிரகாஷ் நட்டா என்னும் ஜே.பி.நட்டா. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பதிலாக பாஜக-வின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நட்டாவின் ஆரம்ப கால வாழ்கை, அரசியல் பயணம் மற்றும்  கட்சியின் தேசிய தலைவரானது பற்றி தற்போது பார்ப்போம்.

பிறப்பு மற்றும் படிப்பு:
பீகார் மாநிலம் பாட்னாவில் டாக்டர் நாராயண் லால் நட்டா - கிருஷ்ணா நட்டா தம்பதிக்கு மகனாக கடந்த 1960-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி பிறந்தார் ஜகத் பிரகாஷ் நட்டா. ஜே.பி.நட்டா தனது பள்ளி படிப்பை பாட்னாவில் உள்ள St. Xaviers பள்ளியில் நிறைவு செய்தார்.  பின் தன் கல்லூரி வாழ்க்கையை பாட்னா பலக்லைக்கழகத்தில் உள்ள, பாட்னா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ படித்ததன் மூலம் துவக்கினார். தொடர்ந்து இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பயின்று முடித்தார்.

15 வயதில் அரசியல்:
ஜே.பி.நட்டா தனது 15-வது வயதிலேயே அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்டார்.  ஜெயபிரகாஷ் நாராயண் துவக்கிய Sampurna Kranti என்ற இயக்கத்தில்1975-ம் ஆண்டு இணைந்தார் நட்டா. இந்த இயக்கம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக துவக்கப்பட்டது.

பின்னர் 1977-ம் ஆண்டு பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான Akhil Bharatiya Vidyarthi Parishad இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பாட்னா பல்கலைக்கழகத்தில் நட்டா படித்த போது, அங்கு அவரது தந்தையே பலக்லைக்கழக துணை வேந்தராக இருந்தார். பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில், செயலாளர் பதவிக்கு Akhil Bharatiya Vidyarthi Parishad சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஒரே நேரத்தில் பல பதவிகளை அப்போது திறம்பட வகித்துள்ளார்.

திருமண வாழ்கை:
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரைச் சேர்ந்த அப்போதைய மக்களவை எம்.பி ஜெய்ஸ்ரீ பானர்ஜியின் மகள் டாக்டர் மல்லிகாவை 1991-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார் ஜே.பி.நட்டா. மல்லிகா இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.இந்த தம்பதியருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

அரசியலில் ஏற்றம்:
1989-ம் ஆண்டில் மக்களவை தேர்தலின் போது பாரதிய ஜனதா இளைஞர் பிரிவின் தேர்தல் பொறுப்பாளர் என்னும் மிக பெரிய பணி நட்டாவிற்கு வழங்கப்பட்டது. 1991-ல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவரானார் நட்டா.

3 முறை வெற்றி:
பின்னர்  1993-ம் ஆண்டில் இமாச்சல பிரதேசத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993 - 1998 , 1998 - 2003 வரை, பின் 2007 - 2012 என மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வன, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார்

ராஜ்யசபாவிற்கு தேர்வு:
கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் நட்டா. போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சாரம் தொடர்பான குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார் ஜே.பி.நட்டா.

சிறந்த வியூகதாரி:
அமித்ஷாவை போலவே கட்சியின் வெற்றிக்காக சிறப்பான முறையில் வியூகங்கள் அமைத்து செயல்படுவதில் ஜே.பி.நட்டா வல்லவராக திகழ்கிறார். கட்சி எடுக்கும் பல முக்கிய முடிவுகளில்,  நட்டாவின் பங்களிப்பும் இருக்கும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

ஒருவருக்கு ஒரு பதவி:
பாரதிய ஜனதா கட்சயில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்று உள்துறை அமைச்சர் ஆனார். இதனை அடுத்து நட்டா செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒருமனதாக தேர்வு:
மாநில அளவில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்களில் கட்சியின் சிறப்பான வெற்றிக்கு தேசிய தலைவரின் பங்களிப்பு மிக அவசியம் என்பதால், நட்டாவை அப்பதவியில் அமர்த்த கோரிக்கை வலுத்து வந்தது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜகத் பிரகாஷ் நட்டா.

.....

இது தொடர்பான செய்திகள்