× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

டெல்லியில் பயங்கரத் தீ விபத்து உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்

08-12-2019

டெல்லியில், 6 மாடி தொழிலக கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் வெளியேறுவதற்கு போதிய வசதியின்றி, பலரும் மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிட்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது. 

தலைநகர் டெல்லியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதி உள்ளது. இங்குள்ள 6 மாடிக் கட்டிடம் ஒன்றில், ஸ்கூல் பேக், லக்கேஜ் பேக் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும், சுமார் 100 ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கேயே தங்குவதாக கூறப்படுகிறது.

இந்த தொழிலகத்தில், தீ விபத்து நேரிட்டதாக அதிகாலை 5.22 மணிக்கு, டெல்லி தீயணைப்புத்துறைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், பல்வேறு இடங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து, பல மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்தின்போது, அபய குரல் எழுப்பியவர்கள், மயக்க நிலையில் இருந்தவர்கள் என, 50க்கும் மேற்பட்டோரை மட்டுமே, தீயணைப்புத்துறையினரால் மீட்க முடிந்தது. இந்த பயங்கர தீ விபத்தில், 43 பேர் உடல்கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர். பலியானவர்களில் பலரும், உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, உயிரிழந்ததாக, டெல்லி தீயணைப்புத்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

லேசான தீக்காயங்களுடனும், மயக்க மடைந்த நிலையிலும் மீட்கப்பட்டவர்கள், லோக் நாயக், ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தீ விபத்து காரணமாக, ராணி ஜான்சி சாலையில், செயின் ஸ்டீபன் ((St Stephen)) முதல் ஜான்தேவாலன் ((Jhandewalan)) பகுதி வரையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது. மீட்பு பணியில், தீயணைப்புத்துறையினருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தீ விபத்து குறித்து பேசிய டெல்லி தீயணைப்புத்துறையினர், 600 சதுர அடி கொண்ட பரப்பளவில், பல மாடிகளை கொண்ட அந்த தொழிலக கட்டிடம், போதிய வெளிச்சமின்றி, கும்மிருட்டாகவும், போய்வர சரியான பாதையின்றி குறுகலாகவும் இருந்ததாக கூறியிருக்கின்றனர்.

போதிய காற்றோட்ட வசதி இல்லாததாலேயே, தீ ஏற்பட்டு, அதிலிருந்து வெளிப்பட்ட புகை வெளியேற வழியின்றி, உள்ளுக்குள்ளேயே சுற்றியதாகவும், இதனால், பலரும் மூச்சுத் திணறி உயிரிழக்கவும், மயக்கமடையவும் காரணமாகிவிட்டதாக, தீயணைப்புத்துறையினர் கூறியிருக்கின்றனர். ஓரிருவருக்கு மட்டுமே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

மற்றவர்கள் லேசான தீக்காயங்களுடனும், பெரும்பாலானவர்கள் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறல், மற்றும் மயக்க நிலையிலேயே மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தொழிலகங்களிலும், தீ தடுப்பான் உள்ளிட்ட தீயணைப்பு கருவிகள், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் அவை இருந்ததா? என விசாரணை நடத்துவதாக, தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, டெல்லி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தீவிபத்தில் 43 பேரை காவு கொண்ட, அடுக்குமாடி கட்டிட உரிமையாளரான ரேஹான் ((Rehan)) என்பவர் மீது, கொலைக்குற்றம் அல்லாத, மரணம் விளைவிக்கும் பிரிவின் கீழ், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவான கட்டிட உரிமையாளர் ரேஹானை தேடிவருவதாக, டெல்லி போலீசார் கூறியுள்ளனர். தீ விபத்துக்கு மின்கசிவே காரணமாக இருக்க கூடும் என மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி((Hardeep Singh Puri)) தெரிவித்திருக்கிறார்.

.....

இது தொடர்பான செய்திகள்